Thursday, December 6, 2018

“நடிகையர் திலகம்” - அந்தக் காலத்து சினிமா மீது எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இருந்ததில்லை. நடுத்தரமான சினிமாவே போதும் என்கிற மனநிலையில் இருந்தேன். நடிகை சாவித்திரி வாழ்க்கையைப் பார்க்கும்போது, ஈரமுள்ள நெஞ்சம் கூட ஒரு துளியாவது கண்ணீர் சிந்தும். 
          முதல் பார்ட் முழுவதும் சிறு சிறு சோகங்கள் இருந்தாலும், நடிகை சாவித்திரியாகப் பாத்திரமேற்ற கீர்த்தி சுரேஷின் நடிப்பு மெய்மையியல் எதார்த்தம். சாவித்திரியை நேரில் பார்த்தது போலவே மிக நுணுக்கமாகத் திரையில் நடித்திருப்பார். அவரது கொஞ்சும் பேச்சும், அழகிய முகப் பாவனையும் அனைவரது பாராட்டைக் கட்டாயம் பெறும். 
         இரண்டாவது பார்ட் தான் மிக மிகச் சுவாரஸ்யமானது. அடுத்தடுத்து வாழ்க்கையில் நடைபெறும் திருப்பம்தான் ஒருவரது வாழ்க்கையைப் புரட்டிப்போடும் தருணங்கள். நடிகை சாவித்திரியின் வாழ்க்கையும் அப்படியே. சாவித்திரியின் கதையை மிகச் செறிவாகவும், அதை திரைக்கதையிலும் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.
          இப் படத்தில் வரும் ஜெமினிக் கணேசனை அனைவருக்கும் பிடித்திருக்கும். அவரது காதல் வார்த்தைகள் வசீகரிக்கும். காம வலையில் ஒருத்தியை வீழ்த்த காதலை முன்னிலைப்படுத்தும் போது, அந்தச் சாம்பார் ஜெமினிக் கணேசனையும் நமக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது. ஆனால், சாவித்திரி ஒரு சகாப்தம். காதலைக் கொச்சைப்படுத்தாமல், காமத்தைப் பிரதானப்படுத்தாமல் உயிர் மூச்சு இருக்கும்வரை வாழ்ந்திருக்கிறார். தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்குச் செய்திருக்கிறார். 
    சமூகத்தில் இன்று “காதல்” காணாமல் போயிருக்கிறது; “காமம்” மட்டுமே பிரதானமாகச் செயல்படுகிறது. ஜெமினிக் கணேசன் உருவில் ஆண்கள் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் பெண்களும் அடக்கம். ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் குடிக்கு அடிமையானால் தமிழ்ச் சமூகத்தின் கெதி என்ன? அதை மிக அழகாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள் திரைப்படக் கலைஞர்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இதுபோன்று மறைந்த கலைஞர்களின் வாழ்க்கையை இப்படித் திரையில் சித்திரமாக்க வேண்டும்.